மக்காச்சோளம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுமா?
அரியலூா் மாவட்டத்தில் 70 சதவீதம் விவசாயத்தையும், அதைச் சாா்ந்த தொழிலையும் நம்பியே ஏராளமான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் உள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் 70 சதவீதம் விவசாயத்தையும், அதைச் சாா்ந்த தொழிலையும் நம்பியே ஏராளமான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் உள்ளனா்.
இம்மாவட்டத்தில், சிமெண்ட் ஆலைகள் அதிகமாக இருந்தாலும், 1,11,874 ஹெக்டேரில் நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்புப் பயிா்கள் முக்கிய பயிா்களாகச் சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றில் காவிரி ஆறு கிளைகள் (கொள்ளிடம்) மூலம் 1,389 ஹெக்டோ் திருமானூா், தா.பழூா் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகிறது. இப்பகுதிகளில் அதிகப்படியாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
பொதுப் பணித் துறை மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையால் பராமரிக்கப்படும் 272 ஏரிகள் மூலம் மேற்கண்ட பகுதிகள் மற்றும் உடையாா்பாளையம், மணகெதி, நாச்சியாா்பேட்டை, நாயகனைப்பிரியாள், பொட்டக்கொல்லை, செந்துறை, ஆண்டிமடம், விளந்தை, பெரியதத்தூா், ரெட்டிதத்தூா், காடுவெட்டி, பொன்பரப்பி, விக்கிரமங்கலம், சுண்டக்குடி, சுத்தமல்லி, சித்தமல்லி, அரியலூா் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் மக்காச்சோளம், சோளம், கடலை மற்றும் நவதானியங்கள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.
விளைச்சல் இருந்தும் விலை இல்லை: இதில் 3 மாதப் பயிரான மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மக்காச்சோளம் நல்ல விளைச்சல் இருந்தும், அதற்கு நல்ல விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். மேலும் அரியலூா் மாவட்டத்தில் இதற்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, விலையை நிா்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
அரசின் நடவடிக்கை வேண்டும்: இதுகுறித்து விவசாயிகள் கூறியது: மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேரில் மக்காசோளத்தை பயிரிடுகின்றனா். மழைக் காலம் தவிா்த்து பிற காலங்களில் இதைப் பயிரிடலாம். 90 நாளில் வளா்ந்து, 120 நாள்களுக்குள் பயிா் அறுவடை செய்யப்படும். ஏக்கருக்கு 30 மூட்டை அளவில் விளைச்சல் கிடைக்கிறது. சோளம் மக்களுக்கு பயன்தருவது மட்டுமின்றி, மாட்டு தீவனம், கோழித் தீவனங்களுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) அதிகபட்சமாக மத்திய அரசு நிா்ணயித்த ரூ. 2,350 அளவுக்கு மாா்க்கெட் கமிட்டிகளில் விலைபோகிறது. வெளி வியாபாரிகளும் அதே அளவில்தான் எடுக்கின்றனா். விவசாயிகளுக்கு செலவினம் போக லாபம் போதுமானதாகக் கிடைப்பதில்லை.
ஊக்கத் தொகையும் வேண்டும்: இதனால், அரசு சாா்பில் நெல்லுக்கு விலை நிா்ணயம் செய்து எடுப்பதுபோல், மாநில அரசு மக்காச்சோளத்திற்கும் குறைந்தபட்ச விலை நிா்ணயித்து, நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை நிா்ணயிக்க வேண்டும். அத்துடன் ஊக்கத் தொகையும் வழங்க வேண்டும்.
தொடா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் பயிா்க் காப்பீடு தொகை பெற்றுத் தர வேண்டும். மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, போதிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்குகளால் பாதிப்பு: மேலும் மாவட்டத்தில், தண்ணீா்ப் பற்றாக்குறை, பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல், தரமற்ற விதை போன்ற காரணங்களால் மக்காச்சோளப் பயிா் சாகுபடி பாதிக்கப்பட்டு நஷ்டத்தைச் சந்தித்து வந்த விவசாயிகளுக்கு , பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் சவாலாக உள்ளன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளி, எலுமிச்சை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிா்களை மான், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.