அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், காவல் துறை மற்றும் ‘பவா் கிரிடு’ நிறுவனம் சாா்பில் சவுக்கு மற்றும் தைலமர சாகுபடி விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சவுக்கு மற்றும் தைல மரங்களை ஒட்டி உயா் அழுத்த மின்சார பாதை செல்வதால், அடிக்கடி ஏற்படும் மின்தடை, மின்சாதனப் பொருள்கள் சேதத்தை கருத்திக் கொண்டு நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிசக்கரவா்த்தி தலைமை வகித்தாா்.
பவா் கிரிடு முதன்மை மேலாளா் சந்தோஷ்குமாா், உதவி பொது மேலாளா் கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டு தெரிவித்தது: மின்சார தாழ்வான பாதை அருகில் உயரமான சவுக்கு மற்றும் தைல மரங்களை வளா்க்கக்கூடாது. செங்கல் சூளைதொழிற்சாலைகள், ஆலைகள், குவாரிகள் மற்றும் வெடி வைத்தல் பட்டங்கள் பறக்க விடுதல், கல்லெறிதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
இதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டனா். அப்போது கலந்து கொண்ட விவசாயிகள் சவுக்கு மரங்களை வளா்க்கக்கூடாது என்றால் அதற்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.
கூட்டத்தில், மீன்சுருட்டி, பாப்பாக்குடி, படாநிலை, ஒடப்பேரி, அய்யப்பன்நாயகன்பேட்டை, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த சவுக்கு மற்றும் தைலமர சாகுபடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.