வடகிழக்குப் பருவமழை: அரசுத் துறையினர் தயாராக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, பாதிப்புகளை தடுப்பது மற்றும் மீட்புப் பணிகளுக்காக அரசின் அனைத்துத் துறையினரும்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, பாதிப்புகளை தடுப்பது மற்றும் மீட்புப் பணிகளுக்காக அரசின் அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் கோவிந்தராஜ் பேசியது:
வடகிழக்குப் பருவமழையால் கரூர் மாவட்டத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆறு வட்டங்களுக்கும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை விழிப்புடன் கண்காணித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழுக்களைச் சேர்ந்த அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கண்மாய்கள், பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றை பொதுப்பணித் துறையினர் உடனுக்குடன் கண்காணிக்க வேண்டும். பாதிப்படையும் நிலை ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மிகுந்த கவனத்துடன் கண்காணிப்பதுடன் நீர்நிலைகள் மற்றும் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை
மூலம் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அப்பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் போன்றவற்றை போதுமான அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையினர் தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ முகாம் அமைத்து செயல்பட வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையினரும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தீயணைப்புப் படையினர் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை கண்காணித்து, சேதம் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்திட வேண்டும். வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், அரசுப் பள்ளி வளாகங்களில் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும். மின்வாரியத்துறையினரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா மற்றும் அனைத்துத் துறையினர் பங்கேற்றனர்.