கடவூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்: ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கரூர் மாவட்டம், கடவூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 226 பயனாளிகளுக்கு ரூ. 50.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 226 பயனாளிகளுக்கு ரூ. 50.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வெள்ளபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு விழா புதன்கிழமை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 226 பேருக்கு ரூ.50.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கி மேலும் பேசியது:
தற்போது மழைக்காலமாக உள்ளதால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைக்காவிட்டால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் நிலை ஏற்படும். டெங்கு போன்ற பல்வேறு வகையான காய்ச்சல் ஏற்படாமல் இருக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். குடிநீர் பாத்திரங்கள், நீர் சேகரிப்பு தொட்டிகளை கொசுக்கள் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். ஆட்டுக்கல், உடைந்த மண்பானை, டயர், தேங்காய் ஓடு, குளிர்சாதன பெட்டியின் பின்புறம் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் என்ற அறிகுறி தென்பட்டால் உடனே அருகே உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜான்சிராணி, வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.