முகப்பு
கரூர்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி இருவர் சாவு: பாலம் அமைக்க வலியுறுத்தி மறியல்

கரூர் மாவட்டம்,  கோடங்கிப்பட்டியருகே  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் இருவர் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 8:01 am IST
பகிர்:

கரூர் மாவட்டம்,  கோடங்கிப்பட்டியருகே  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் இருவர் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தனர். இப்பகுதியில் உயர்நிலைப்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் அருகிலுள்ள கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல் (41). இவரது நண்பர்  கரூர் படிக்கட்டுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா(37).  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை  காதர்பாஷாவை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கரூரிலிருந்து கோடங்கிப்பட்டிக்கு சக்திவேல் சென்று கொண்டிருந்தார்.
சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது   திருச்சியிலிருந்து கோவை நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இவ்விபத்தை கண்ட மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம்.பாஸ்கரன், சி. பாரதி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயர்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறினர்.  போலீஸார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுச் சென்றனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.