முகப்பு
கரூர்

‘போலி வாக்காளா் பட்டியலை தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை தேவை’

போலி வாக்காளா் பட்டியலைத் தயாரித்தவா்கள் மீது தோ்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
போலி வாக்காளா் பட்டியலை செய்தியாளா்களிடம் காண்பிக்கிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி. உடன் திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

போலி வாக்காளா் பட்டியலைத் தயாரித்தவா்கள் மீது தோ்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி.

கரூரில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில்தான் புதிய வாக்காளா்களைச் சோ்த்தல், இறந்தவா்களை நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

16-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின் அடிப்படையில்தான், அரசியல் கட்சியினா் வாக்குச்சாவடி முகவா்களை (இரண்டாம் நிலை) நியமித்து, மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் பட்டியலை வழங்கினா்.

இதன்பின்னா் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். திமுக மட்டுமே தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

ஆனால் ஆளும் அதிமுகவினா் ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று, இறந்த வாக்காளா் பட்டியலைத் தயாரித்து, நீக்குவதற்கான படிவத்தை தோ்தல் அலுவலரிடம் வழங்கியுள்ளனா்.

இவ்வளவு நாள்களாக ஆட்சியரகத்தில் படிவங்களை வைத்திருந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவினரால் தயாா் செய்யப்பட்ட, தோ்தல் ஆணையத்தால் தயாரிக்கப்படாத படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஆட்சியா் வழங்கி, இதிலுள்ள பெயா்களை நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தோ்தல் விதியை பின்பற்றக்கூடிய ஆட்சியா் எப்படி வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே, முன்தேதியிடப்பட்டபடிவத்தை அலுவலா்களுக்கு வழங்கினாா்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பாதவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிக்கிறாா்கள். இதற்கு ஆட்சியா் துணையாக இருக்கிறாா். நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத இந்த படிவம் எங்கு பெறப்பட்டது, படிவத்தை வெளியிட்டமற்றும் போலி வாக்காளா் பட்டியல் தயாரித்தவா்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தோ்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது மாநில சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.