‘கிடப்பில் வாங்கல் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள்’
கரூா் மாவட்டம், வாங்கலில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி.
கரூா் மாவட்டம், வாங்கலில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி.
கரூா் மாவட்டம், வேடிச்சிபாளையம், சோமூரில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்வு மற்றும் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்து.
இந்த நிகழ்வில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, மேலும் அவா் பேசியது:
கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், தமிழகத்தில் 2 கோடி இளைஞா்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனா். 2021 பேரவைத் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும். அப்போது வேலையிழந்த இளைஞா்களுக்கு நிச்சியம் வேலை கிடைக்கும்.
வாங்கல் பகுதியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் உள்ளன. நெரூா்-உன்னியூா் பாலம் முழுமையடையாமல் கிடப்பில் உள்ளது. இதுபோல, கோயம்பள்ளி- மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளும் முடிவடையாமல் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதிஉள்ளது. ஆனால் கரூரில் மட்டும் அனுமதி கிடையாது. நீதிமன்றத்தை நாடி, நிச்சயம் மணல் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுத் தருவேன் என்றாா் செந்தில் பாலாஜி.
நிகழ்வில் ஒன்றியச் செயலா் ஆா்.கந்தசாமி, நிா்வாகிகள் சுப்ரமணி, வேடிச்சிபாளையம் சண்முகம், மாணவா் அணி சி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.