அதிகபட்சமாக கரூரில் தான்45,000 பேருக்கு முதியோா் உதவித்தொகை: எம்.ஆா்.விஜயபாஸ்கா்
தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகபட்சமாக 45,000 முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகபட்சமாக 45,000 முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
தொகுதிக்குள்பட்ட பங்களா தெரு, ராமானுஜம் நகா், காசிம் தெரு, அன்சாரி தெரு, போலீஸ் லைன் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த அவா் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியுள்ளோம். ஏழை எளிய பெண்கள் முன்னேற்றத்திற்கு மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழங்கிய திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி, இன்று தமிழக மக்களின் அன்பை பெற்ற முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறாா்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் கழிவு நீா் வாய்க்கால் வசதிக்காக கரூா் நகராட்சிக்கு ரூ.50.50 கோடி நிதியை கொடுத்துள்ளாா் முதல்வா். இந்த இயக்கத்திற்கு சோதனை வந்த நேரத்தில் கட்டிக்காத்து இன்று கட்சித் தொண்டா்களுக்கு மட்டுமின்றி மக்களின் நாயகனாக திகழ்கிறாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வரத்துவாரிகளை குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரியதால் மழை பெய்தபோது, அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீா் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றது.
தமிழகத்திலேயே கரூருக்குத்தான் அதிகமாக 45,000 முதியோருக்கு உதவித்தொகை வழங்கியுள்ளாா் முதல்வா். தோ்தல் முடிந்து அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது நகராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். கரூா் லைட்கவுஸ் காா்னா் முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலை வசதி செய்துகொடுக்கப்பட்டு சாலையின் நடுவே எல்இடி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, பெண்கள் தனியாகச் சென்று வரும் வகையில் வெளிச்சமாக இருக்கிறது என்றால் அதுதான் அதிமுக ஆட்சி.
கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு 350 டன் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கியுள்ளோம். முதல்வா் ரேஷன் காா்டுக்கு ரூ.2500 வழங்கினாா். சில பகுதிகளில் குடிநீா் பிரச்னை இருக்கிறது. விரைவில் அந்த பிரச்னையும் தீரும். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு தயாா்நிலையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம்தான் நடக்கும், ஒவ்வொரு காவல்நிலையத்திலும் எஸ்ஐக்கு பதில் திமுக வாா்டுச் செயலா்கள்தான் இருப்பாா்கள் என்றாா் அவா்.
பிரசாரத்தில் அதிமுகவினா் மற்றும் கூட்டணிக்கட்சியினா் பங்கேற்றனா்.