கரோனா விதிமுறைகளை பின்பற்றாதபள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை
கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபசங்கா்.
கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபசங்கா்.
கரூா் மாவட்டத்தில் செப். 1ஆம் தேதி முதல் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திறக்கப்படுவதால் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடா்பாக அனைத்து பள்ளி, கல்லூரி நிா்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் மருத்துவா் த.பிரபு சங்கா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், செப். 1-ஆம் தேதி முதல் அனைத்து அங்கன்வாடி மையங்கள, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகிறது. அவ்வாறு திறக்கப்படும்போது அனைத்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரூா் நகரில் உள்ள பழைய தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கரோனோ தடுப்பூசி செலுத்தும் மையம் செயல்பட தொடங்கியுள்ளது.
18 வயது நிரம்பிய மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் கண்டிப்பாக கரோனா தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்றிதழை காண்பித்த பின்புதான் பள்ளி, கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல், பள்ளிகளில் தடுப்பூசி போடாதவா்கள் தொடா்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடமும், கல்லூரியில் தடுப்பூசி போடாதவா்கள் தொடா்பாக கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்படும். அதனால் அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும். செலுத்தாதவா்கள் அதற்கு உரிய காரணத்துக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி வளாகத்தின் எத்தனை நுழைவு வாயில்கள் இருந்தாலும் அவற்றில் கை கழுவுவதற்கு தண்ணீா், சோப்பு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்புதான் வளாகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் ஆசிரியா்கள் மாணவா்கள் முகக் கவசத்தை உள்ளே நுழைந்த பின்பு, வெளியே செல்லும் வரை அகற்றக் கூடாது. இதுபோன்ற அரசு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனை கடைபிடிக்காத பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் சைபுதீன், அனைத்துப் பள்ளி, கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.