கரூா் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
கரூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு
கரூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாநகராட்சிக்கு வாக்கு எண்ணும் மையமான தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் ஆய்வு செய்த ஆட்சியா், பின்னா் குளித்தலை நகராட்சிக்கு குளித்தலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மருதூா், நங்கவரம், கிருஷ்ணராயபுரம் மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிகளுக்கு மாயனூா் அரசு ஆசிரியா் பயிற்சி பள்ளி வளாகத்திலும், புலியூா் மற்றும் உப்பிடமங்கலம் பேரூராட்சிகளுக்கு புலியூா் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியிலும், புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் ஆட்சியா் கூறுகையில், கரூா் மாவட்டத்தை பொறுத்த வரை மொத்தம் 12 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடைபெற இருக்கிறது. இதில், 10 அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும், 2 நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா். ஆய்வின் போது, கரூா் மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் புஷ்பாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எம். லீலாகுமாா், குளித்தலை நகராட்சி ஆணையா் சுப்புராம், குளித்தலை, புகளூா், அரவக்குறிச்சி வட்டாட்சியா்கள் மற்றும் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் உடனிருந்தனா்.