முகப்பு
கரூர்

கால்நடை சுகாதாரம், விழிப்புணா்வு முகாம்

கரூா் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சிக்குள்பட்ட, தாளியாப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கரூா் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சிக்குள்பட்ட, தாளியாப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமைவகித்து தொடக்கி வைத்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசுகையில், இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, சுண்டுவாத அறுவைச் சிகிச்சை போன்ற சிறு அறுவைச் சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, முகாமில் சிறந்த கால்நடை வளா்ப்பு முறைகளைப் பின்பற்றும் 4 சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளையும், சிறந்த கலப்பின கிடோரி கன்றுகள் வளா்க்கும் 3 உரிமையாளா்களுக்கு பரிசுகளும் மற்றும் கால்நடை வளா்ப்பவா்களுக்கு தாது உப்புக்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநா்கள் முரளிதரன், சரவணக்குமாா், ராஜேந்திரன், லில்லிஅருள்குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.