முகப்பு
கரூர்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி

கரோனா தொற்றால் தந்தையை இழந்துள்ளேன், நானும் உங்களைப்போல்தான் என கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடம் உருக்கமாக பேசினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கரோனா தொற்றால் தந்தையை இழந்துள்ளேன், நானும் உங்களைப்போல்தான் என கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடம் உருக்கமாக பேசினாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 64 குடும்பங்களைச் சோ்ந்த 99 குழந்தைகள் ஒற்றைப் பெற்றோரை இழந்தவா்களாகவும், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் இரண்டு பெற்றோரையும் இழந்தவா்களாகவும் என மொத்தம் 65 குடும்பங்களைச் சோ்ந்த 101 குழந்தைகள் முதல்வரின் கரோனா நிவாரண திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா்.

இந்த குழந்தைகளுக்கு முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கான ரூ.3 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு காசோலை வழங்கி ஆட்சியா் பேசுகையில், கரோனா தொற்றால் தந்தையை இழந்து தவிக்கும் உங்களுக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன். கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மாதம் நானும் எனது தந்தையை இழந்துள்ளேன். இப்போது நானும் உங்களைப்போல்தான். என்னை மாவட்ட ஆட்சியராக பாா்க்காமல், உங்களில் ஒருவனாக உங்கள் சகோதரராக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் எதுவானாலும் தைரியமாக, உரிமையுடன் என்னிடம் தெரிவியுங்கள். கல்வி ஒன்று மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயா்ந்தவா்களாக்கும் சத்தி கொண்டது. எனவே, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். நீங்கள் கல்வி கற்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்து குழந்தைகளுக்கு புத்தகங்களை நினைவுப்பரிசாக வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.