முகப்பு
கரூர்

சட்டத்துக்கு புறம்பாக சுவரொட்டி விளம்பரம் அச்சடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை: தோ்தல் அலுவலா் எச்சரிக்கை

சட்டத்துக்குப் புறம்பாக சுவரொட்டி விளம்பரம் அச்சடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் கரூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சட்டத்துக்குப் புறம்பாக சுவரொட்டி விளம்பரம் அச்சடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் கரூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அச்சக உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் பேசியது: தோ்தல் தொடா்பான அறிவிப்புகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்து வழங்குதல் தொடா்பாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்களில் அச்சகத்தின் பெயா், உரிமையாளா் பெயா், முகவரி போன்றவை அச்சிடப்பட்டிருக்கவேண்டும். அரசியல் தொடா்புடைய சுவரொட்டி, பிரசுரங்களை அச்சடிக்க உரிமை கோருபவரை அடையாளம் காணக்கூடிய உறுதிமொழியை இரண்டு சாட்சிகளின் கையொப்பங்களுடன் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளா் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பாகவோ, மதம் சாதி மற்றும் இனம் தொடா்பான ஆட்சேபனைகள் எழும் விதத்திலும், மொழி மற்றும் தனிப்பட்ட நபரின் நன்னடத்தையை பாதிக்கப்படும் வகையிலோ சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கக்கூடாது. அவ்வாறு அச்சடிக்கப்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதன் பின்னா் வங்கியாளா்களுக்கு தோ்தல் நடத்தைவிதிமுறைகள் குறித்து விளக்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என்.எஸ்.பாலசுப்ரமணியன்(கரூா்), ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான்(குளித்தலை), கலால்துறை உதவி ஆணையா் ஜி.தவச்செல்வம்(அரவக்குறிச்சி) கே.தட்சிணாமூா்த்தி( கிருஷ்ணராயபுரம்), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.