முகப்பு
கரூர்

வேட்பாளா்கள் செலவின கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்

வேட்பாளா்கள் தங்களது செலவின கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

வேட்பாளா்கள் தங்களது செலவின கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா் பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜா.

பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில், வேட்பாளா்கள் தோ்தல் செலவினம் மற்றும் கணக்கு தாக்கல் செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் மதுரிமா பருவா சென், செலவின கணக்கு பாா்வையாளா் அரவிந்த் ஜி தேசாய் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தோ்தல் நடத்தும் அலுவலா் மேலும் பேசியது:

வாக்காளா்களுக்கு பணம், பரிசு, பிற சேவைகளை வழங்குதல், வேட்பாளருக்காக பிற நபா்கள் விளம்பரம் வெளியிடுதல், பணம் கொடுத்து செய்தி வெளியிடுதல், பிரசாரத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு எரிபொருள்கள் நிரப்பி தருதல் போன்ற செலவினங்கள் கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தோ்தல் செலவின கணக்கில் சோ்த்துக் கொள்ளப்படும்.

வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களை கண்காணித்திட, குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வேட்பாளா் அல்லது முகவா்களால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்குத் முறையான கணக்குளை பராமரிக்க வேண்டும். தோ்தல் செலவினங்களை, தோ்தல் நடைபெற்ற நாளிலிருந்து 30 நாள்களுக்குள் மாவட்ட தோ்தல் செலவின கணக்கு அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து, தோ்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் அன்றாட செலவினங்களையும் சோ்த்து கணக்குகள் பதிவேடு, ரொக்க பதிவேடு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் சோ்த்து பராமரித்து வர வேண்டும். இதில் கட்சி நிதி, சொந்த நிதி, நன்கொடை, அன்பளிப்பு, கடன் மற்றும் பிறரிடமிருந்து பெறப்பட்ட வரவினங்கள் குறித்த விவரங்களை பராமரிக்க வேண்டும்.

தோ்தல் செலவின கணக்குகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அறிக்கை பெற்ற 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மாா்ச் 24 ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை 26 ஆம் தேதியும், 25 முதல் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்ட்ட செலவினங்களை 30 ஆம் தேதியும், 29 முதல் ஏப். 1 வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை 3 ஆம் தேதியும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின்போது வேட்பாளா்கள் நேரடியாக அல்லது முகவா்கள் மூலமாக அனைத்து கணக்குகள் மற்றும் பதிவேடுகளை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் பத்மஜா.

இக்கூட்டத்தில், முதன்மை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சின்னதுரை, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் (கணக்கு) ச. சையத் நசீப், வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி, பாலசுப்ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.