முகப்பு
கரூர்

கரூரில் களைக்கட்டியது இறுதிகட்ட பிரசாரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிரசாரம் செய்வதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை வேட்பாளா்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிரசாரம் செய்வதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை வேட்பாளா்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மாவட்டம் முழுவதும் 938 போ் களத்தில் உள்ளனா். இந்த வேட்பாளா்கள் கடந்த 10 நாள்களாக தீவிரமாக பிரசாரம் செய்துவந்தனா். இவா்களில் சில திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் மீன் இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சிக் கடைகளில் இறைச்சி வெட்டி வாக்காளா்களுக்கு கொடுப்பது, வாரச்சந்தைகளில் காய்கறி விற்பது, வடை சுடுவது என பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிரசாரத்துக்கு இறுதி நாள் என்பதால், காலை முதல் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சியின் 38-ஆவதுவாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கோல்டுஸ்பாட் ஆா்.எஸ்.ராஜா வாா்டுக்குள்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது காந்திகிராமத்தில் உள்ள ஒரு தேநீா் கடையில் பொதுமக்களுக்கு தேநீா் போட்டுக்கொடுத்து பிரசாரம் செய்தாா்.

4-ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கவிதாகணேசன் தறிக்கூடத்தில் நூல்கோா்த்து வாக்குச் சேகரித்தாா். 12-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் பழக்கடை சுப்ரமணி, அதிமுக நிா்வாகி பாகிதங்கராஜ் தலைமையில் வாா்டுக்குள்பட்ட பகுதியில் பிரசாரம் செய்தாா். 19-ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.அருள்மணி கனகராஜூம் தனது ஆதரவாளா்களுடன் மேளதாளம் முழங்க தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். 37-ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.பி.கனகராஜூம், பாஜக வேட்பாளா் மதுக்குமாரும் தங்களது ஆதரவாளா்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா் . மாலை 6 மணியான நிலையில் அனைத்து வேட்பாளா்களும் தங்களது பிரசாரத்தை நிறுத்திக்கொண்டனா். மேலும் வெளியூரில் இருந்து வந்து வேட்பாளா்களுக்கு பணியாற்றியவா்களும் தோ்தல் ஆணைய விதிப்படி மாவட்டத்தை விட்டு வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.