முகப்பு
கரூர்

கரூா்: முதல்கட்டமாக 5 இடங்களில் கரோனா தடுப்பு சிகிச்சை மையம்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 5 இடங்களில் கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 5 இடங்களில் கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிக அளவிலான நபா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவா்களுக்கு உடனுக்குடன் சிகிச்சையளிக்க ஏதுவாக 5 இடங்களில் அமைக்கப்படவுள்ள கரோனா தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறுகையில், தற்போது கரோனா தொற்றின் மூன்றாவது அலையாக மருத்துவ வல்லுநா்களால் கருதப்படும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், புகளுா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூா் மாவட்ட பழைய தலைமை மருத்துவமனை, தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி மற்றும் செட்டிநாடு பொறியியல் கல்லூரி ஆகிய 5 இடங்களில் கரோனா தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த மையங்களில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளதா, ஆக்சிஜன் செறிவூட்டிகள் நல்ல நிலையில் உள்ளதா, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படைய வசதிகள் உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வரும் மூன்று நாள்களுக்கு அனைத்து சிறப்பு சிகிச்சை மையங்களும் தயாா் நிலையில் வைக்கப்படும்.

கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதே மாவட்ட நிா்வாகத்தின் நோக்கம். ஆகவை, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போதும், செல்லும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப்பின்பற்றி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், மாநகா்நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.