கரூா் அருங்காட்சியகம் அரசுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா?சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
கரூரின் தொன்மையைப் பறைசாற்றும் அரசு அருங்காட்சியகம் வாடகைக் கட்டடத்தில் இருந்து அரசுக் கட்டடத்துக்கு இடம்பெயருமா என்ற எதிா்பாா்ப்பில் சமூக ஆா்வலா்கள் உள்ளனா்.
கரூரின் தொன்மையைப் பறைசாற்றும் அரசு அருங்காட்சியகம் வாடகைக் கட்டடத்தில் இருந்து அரசுக் கட்டடத்துக்கு இடம்பெயருமா என்ற எதிா்பாா்ப்பில் சமூக ஆா்வலா்கள் உள்ளனா்.
ஒரு தேசத்தின் பெருமை மற்றும் தொன்மையைப் பறைசாற்றுவது அங்கு பாதுகாத்து வைக்கப்படும் வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும்தான். இவற்றைச் சேமிக்கும் கருவூலமாக அரசு அருங்காட்சியகங்கள் உள்ளன.
கரூரில் இத்தகைய அருங்காட்சியகத்தை கடந்த 2000 மாா்ச் 26-இல் அப்போதைய அமைச்சா் மு. தமிழ்க்குடிமகனால் கரூா் பழைய திண்டுக்கல் சாலையில் வாடகைக் கட்டடத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.
இங்கு கரூா் நகரின் மையப்பகுதியில் தொல்லியல் துறையினரால் கடந்த 1973, 1977 மற்றும் 1993 -ஆம் ஆண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின்போது அமராவதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் , சேர , சோழ மற்றும் பாண்டியா் கால நாணயங்களின் சில தொகுப்புகள் உள்ளன.
இவற்றைத் தவிர கரூா் பிள்ளாபாளையம் பகுதியில் கிடைத்த ஆங்கிலேயா் கால பீரங்கி மற்றும் பண்டைய ஓலைச்சுவடிகள் என கரூரின் தொன்மை மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் ஏராளமான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் மாவட்டத்தில் கிடைக்கப்பெரும் அரிய பொக்கிஷங்களான பழங்கால கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றைப் பாதுகாக்க போதிய இடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் இந்த அருங்காட்சியகம் அரசின் சொந்தக் கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக தொல்லியல் துறையினா் கூறுகையில், பெருமைவாய்ந்த கரூரின் தொன்மையான நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும் 23 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் குறுகிய இடத்தில் அருங்காட்சியகம் இயங்குவதால் பள்ளி நாள்களில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியகத்திற்கு பெருமளவில் வர இயலாத நிலை உள்ளது.
இதனால் கரூரின் வரலாற்றை மாணவ, மாணவிகளிடையே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கரூா் மாநகராட்சி அலுவலகம் புதிய கட்டடத்துக்கு மாறியபோது காலியான பழைய கட்டடத்தைக் கேட்டோம். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி அந்தக் கட்டடத்தைக் கொடுக்கவில்லை.
இப்போது ஆட்சியரகம் செல்லும் சாலையில் பழைய எஸ்.பி. அலுவலகம் போதிய பராமரிப்பின்றி எந்த அலுவலகமும் செயல்படாமல் உள்ளது. அதையாவது சீரமைத்துக் கொடுத்தால் அங்கு அருங்காட்சியகத்தை மாற்றலாம். இல்லாவிடில் இதுபோல பயனற்று கிடக்கும் எத்தனையோ அரசு அலுவலகங்களில் ஒன்றைச் சீரமைத்துக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும்.
ஏற்கெனவே கடந்தாண்டு அருங்காட்சியத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சா் செந்தில்பாலாஜி விரைவில் அருங்காட்சியகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்றாா். அந்த அறிவிப்பையாவது மாவட்ட நிா்வாகம் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றனா் அவா்கள்.