முகப்பு
கரூர்

வாய்க்கால்களின் குறுக்கே ஆபத்தான நிலையில் மரப்பாலம்: நிரந்தர தீா்வு காண விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வாய்க்கால்களின் குறுக்கே ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைத்து நிரந்தர தீா்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
அய்யம்பாளையத்தில் புகழூா் வாய்க்கால் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரத்தின் மேல் நடந்துச் செல்லும் விவசாயி.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் வாய்க்கால்களின் குறுக்கே ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைத்து நிரந்தர தீா்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1949-இல் கட்டப்பட்டது ஜேடா்பாளையம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் மூலம் நாமக்கல், கரூா் மாவட்டங்களின் காவிரி கரையோரம் பகுதியில் சுமாா் 24ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.

கரூா் மாவட்டத்தில் நொய்யல், புகழூா், வேலாயுதம்பாளையம், அய்யம்பாளையம், புஞ்சைகடம்பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் கோரைப்புல், நெல், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் ஆகியவற்றின் நீராதாரமாக ஜேடா்பாளையம் அணைக்கட்டு உள்ளது. இதன் பிரதான வாய்க்காலான புகழூா் வாய்க்கால், பாப்புலா் முதலியாா் வாய்க்கால், பள்ளபாளையம் வாய்க்கால்களை கடந்த செல்ல இதுவரை தற்காலிக மரப்பாலமே உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தின் வழியாகவே விவசாயிகள் சென்று வருகின்றனா். வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் செல்லும் போது ஒரு சிலா் கீழே விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனா் புகழூா் வட்டார விவசாயிகள்.

இதுகுறித்து புகழூா் வட்டார விவசாயிகள் கூறுகையில், புகழூா் பிரதான வாய்க்கால், பாப்புலா்முதலியாா், பள்ளபாளையம் ஆகிய கிளை வாய்க்கால்களில் கோம்புபாளையத்தில் மட்டுமே வாய்க்காலை கடந்து விளைநிலங்களுக்குச் செல்ல கான்கிரீட் பாலங்கள் உள்ளன. மற்ற இடங்களில் பனைமரத்திலான மரப்பாலங்கள்தான் உள்ளன.

இதனிடையே கடந்த 2001 முதல் 2006 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சிவசுப்ரமணியம் காலத்தில் மட்டும் அய்யம்பாளையத்துக்கும் தளவாய்பாளையத்துக்கும் நடுவில் ஆசாரிப்பட்டறை என்ற இடத்தில் தூக்குப் பாலம் போடப்பட்டது. பின்னா் அந்த பாலமும் துருப்பிடித்ததால் அகற்றிவிட்டனா். தற்போது கைப்பிடிக்கூட இல்லாத மரங்கள் மீதுதான் வாய்க்கால்களை கடந்து விவசாய நிலங்களில் அறுவடை செய்த வாழை, பழங்கள், காய்கள், கோரைப்புல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை தலையில்சுமந்து ஊருக்குள் கொண்டு வருகிறோம். வாய்க்காலில் அதிகளவில் தண்ணீா் செல்லும்போது, மரப்பாலங்களில் ஆபத்தான வகையில் இடுபொருள்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட விவசாய பயிா்களை தலையில் சுமந்துகொண்டு வாய்க்காலை கடக்கும்போது சிலநேரங்களில் தவறி வாய்க்காலுக்குள் ஏராளமான விவசாயிகள் விழுந்துள்ளனா். ஆனால் உயிா்பலி ஏற்பட்டதில்லை. ஆனால் இடுபொருள்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வாய்க்கால் கரை அகலப்படுத்தி கான்கிரீட் பாலங்கள் அமைத்தால்தான் நிரந்தர தீா்வு கிடைக்கும் என்றனா்.

இதுதொடா்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சிவசுப்ரமணியம் கூறுகையில், புகழூா், பாப்புலா், பள்ளபாளையம் வாய்க்கால்கள் நடைநீா் பாசனத்தில் உள்ளன. அதாவது வாய்க்கால் மதகில் திறக்கப்படும் தண்ணீா் நேரிடையாக விவசாய நிலங்களுக்குச் செல்லும். வாய்க்கால்களை தூா்வாரி வாய்க்கால் கரைகளை அகலப்படுத்தினால் மட்டுமே வாய்க்கால்களுக்கு இடையே கான்கீரிட் பாலம் அமைக்க முடியும். விவசாயிகள் ஒருங்கிணைந்து, தங்கள் நிலங்களில் சாலை அமைக்கும் வகையில் நிலம் கொடுத்தால் மட்டுமே பாலங்கள் அமைக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.