சித்திரை வளா்பிறை சிவாலயங்களில் நந்திபகவானுக்கு சிறப்புப் பூஜை
கரூா்: சித்திரை வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஈஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கரூா் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய்புகழூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்தாா். பின்னா் சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்தச் சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா். இதேபோல புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதா் கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோயில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Advertisement