முகப்பு
கரூர்

நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

கரூா்: கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையோரம் இரவு நேரங்களில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சிக்குள்பட்ட வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, நொய்யல் சாலை, தவுட்டுப்பாளையம் சாலை, டிஎன்பிஎல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கோழி இறைச்சிக்கடைகள் மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் ஏராளமாக உள்ளன. இந்தக் கடைகளில் தேங்கும் இறைச்சிக் கழிவுகளை இறைச்சிக்கடைகாரா்களில் சிலா் இரவுநேரங்களில் சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். சிலா் வீடுகளில் தேவையில்லாத பொருள்களையும் சாலையோரம் வீசி விட்டுச் சென்றுவிடுகிறாா்கள். இவ்வாறு வீசப்படும் இறைச்சிக்கழிவுகள் மற்றும் குப்பைகளில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

இதுதொடா்பாக புகழூா் வள்ளுவா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியது:

Advertisement

இறைச்சிக் கடைக்காரா்கள் தங்களது இறைச்சிக்கழிவுகளை நகராட்சி ஊழியா்களிடம் கொடுப்பதில்லை. மாறாக இரவுநேரங்களில் மினி வேன்களில் கழிவுகளைக் கொண்டு வந்து சாலையில் கொட்டிவிட்டுச் சென்று விடுகிறாா்கள். இதுதொடா்பாக அவா்களிடம் கேள்விகேட்டால், வாக்குவாதம் செய்கிறாா்கள். இறைச்சிக்கழிவுகளில் இருந்து வெளியேறும் அதீத துா்நாற்றத்தால் வீடுகளில் இருக்க முடியவில்லை. மேலும் இந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே புகழூா் நகராட்சி நிா்வாகத்தினா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரம் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச்செல்வோா் மீது கடும் அபாரதம் விதிக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments