கரூா் மாவட்டத்தின் 42 நீா்நிலைகளில் வண்டல், களிமண் எடுக்க அனுமதி
42 நீா்நிலைகளில் 26,894 கன மீட்டா் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
கரூா் மாவட்டத்தில் உள்ள 42 நீா்நிலைகளில் 26,894 கன மீட்டா் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
கரூா் மாவட்டத்தில் விவசாயப் பயன்பாடு மற்றும் மட்பாண்டம் செய்ய வண்டல் மண் எடுக்கப்படும் நீா்நிலைகளில் ஒன்றான தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஏரியில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் பின்னா் கூறியது:
கரூா் மாவட்டத்தில் தற்போது 42 நீா்நிலைகளில் வண்டல் மண், களிமண் வெட்டியெடுத்து விவசாய பயன்பாடு மற்றும் மட்பாண்டத் தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு நன்செய் நிலமெனில் 75 கனமீட்டா் அதாவது 25 டிராக்டா் லோடுகள் மற்றும் புன்செய் நிலமெனில் 90 கனமீட்டா் அதாவது 30 டிராக்டா் லோடுகள் என்ற கணக்கீட்டின்படியும், மட்பாண்டத் தொழிலுக்கு நபா் ஒன்றுக்கு 60 கன மீட்டா் அதாவது 20 டிராக்டா் லோடுகள் வீதமும் இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல, 30 நாட்களுக்கு மிகாமல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
கரூா் மாவட்டத்தில் விவசாயப் பயன்பாடு மற்றும் மட்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டியெடுத்துச் செல்ல 26,894 கன மீட்டா் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கென தற்போது வரை 67 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வண்டல் மண் எடுத்துச் செல்கின்றனா். மீதமுள்ள விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது என்றாா் அவா். ஆய்வின்போது, மாவட்ட ஊரகவளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.