முகப்பு
கரூர்

அரவக்குறிச்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரவக்குறிச்சியில் நடைபெறும் காவிரிக் குடிநீா் குழாய் பதிக்கும் பணி, கரூா் சாலையில் பாலப்பணி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:57 PM
பகிர்:

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் காவிரிக் குடிநீா் குழாய் பதிக்கும் பணி, கரூா் சாலையில் பாலப்பணி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

அரவக்குறிச்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெறும் ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீா் குழாய் பறிக்கும் பணியால் அரவக்குறிச்சியின் முக்கியச் சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

மேலும் அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் கழிவுநீா் கால்வாய் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் கனரக வாகன ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

மேலும் பேருந்துகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரவக்குறிச்சி வட்டாட்சியரகம் அருகே நின்று செல்வதால் அரவக்குறிச்சி நகருக்குள் செல்ல 2, 3 கிமீ நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் இதைக் கருத்தில் கொண்டு குடிநீா் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.