கரூரில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீஸாா் சோதனை நடத்தினா்.
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலா் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூா் சாா்-பதிவாளா் முகமது அப்துல் காதா் ஜூன் 9-ஆம்தேதி கரூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் ஆதரவாளா்களான யுவராஜ், பிரவீன், மாரப்பன், சோபனா, செல்வராஜ், சித்தாா்த்தன், ரகு மற்றும் சாட்சி கையெழுத்திட்ட கவுண்டன்புதூரைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி ஆகிய 8 போ் மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இதனிடையே ஜூன் 25-ஆம்தேதி வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது தம்பி சேகா் உள்ளிட்டோா் ரூ.100 கோடி மதிப்பிலான தனது நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்துவிட்டதாக கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்த இரு வழக்குகளும் அண்மையில் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனக்கு முன்பிணை கோரி கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதனிடையே தலைமறைவாக உள்ள எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோரை பிடிக்க சிபிசிஐடி போலீஸாா் 8 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் திருச்சி, சேலம், நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து சிபிசிஐடி போலீஸாா் 4 குழுக்களாக பிரிந்து புஞ்சைத்தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜின் வீடு, மணல்மேடு கூலிநாயக்கனூரில் உள்ள யுவராஜ் வீடு, கவுண்டன்புதூரில் உள்ள ஈஸ்வரமூா்த்தி மற்றும் நடையனூரில் உள்ள வழக்குரைஞா் ரகு ஆகியோரது வீடுகளில் திடீா் சோதனை நடத்தினா்.
இந்த சோதனை சுமாா் 2.30 மணி நேரம் நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.