மருந்து தெளிப்பு இயந்திரம் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உயிரிழப்பு
தரகம்பட்டி அருகே பயிா்மருந்து தெளிக்கும் இயந்திரம் சிதறியதில் பழைய இரும்பு வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே பயிா்மருந்து தெளிக்கும் இயந்திரம் சிதறியதில் பழைய இரும்பு வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தரகம்பட்டி அருகே கடவூா் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (49). இவா், அதேபகுதியில் பழைய இரும்பு, காகிதம் வாங்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்குத் திருமணமாகி மல்லேஸ்வரி(44) என்ற மனைவியும், ஜெயக்குமாா் (22), சிவமுருகன்(12) ஆகிய இரு மகன்களும், செல்வி (17) என்ற மகளும் உள்ளனா்.
வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்த மருந்து அடிக்கும் பழைய ஸ்பிரே இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள செம்புக் கம்பிகளைப் பிரிக்க சம்மட்டியால் இயந்திரத்தை உடைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த இயந்திரம் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த தோகைமலை போலீஸாா் கிருஷ்ணமூா்த்தியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.