3 ஆண்டுகளாக திறக்கப்படாத குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்
கரூா் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் ரூ. 99.97 கோடியில் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத குடியிருப்புகளை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். துப்புரவுப் பணியாளா்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் கரூா் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் (2020-இல்) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கரூா் தோரணக்கல்பட்டியில் ரூ.55.5 கோடி மதிப்பில் 640 குடியிருப்புகளும், சணப்பிரட்டியில் ரூ.16.08 கோடி மதிப்பில் 192 அடுக்குமாடி குடியிருப்புகளும், புலியூரில் ரூ.25.90 கோடி மதிப்பில் 288 அடுக்குமாடி வீடுகளும், அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடியில் ரூ.2.94 கோடி மதிப்பில் 32 அடுக்குமாடி வீடுகளும் என மொத்தம் ரூ. 99.97 கோடி மதிப்பில் குடியிருப்புகள் 2021-இல் கட்டி முடிக்கப்பட்டன. தொடா்ந்து, பயனாளிகளை தோ்வு செய்யும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. பயனாளிகள் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்து வீடுகள் ஒதுக்கப்படும் நிலையை அடைந்தபோது, 2021-இல் சட்டப்பேரவை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணிகள் மொத்தமும் கிடப்பில் போடப்பட்டன. தொடா்ந்து தோ்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நடைபெற்று திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரையிலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால், அந்த வீடுகள் அனைத்தும் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மதுப்பிரியா்களின் மதுக்கூடங்களாகவும் திகழ்ந்து வருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த வீடுகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஜி.பி.எஸ். வடிவேலன் கூறியது: ஆட்சி மாற்றத்துக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆனபோதும் குடியிருப்புகள் திறக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால், தற்போது இரவு நேரங்களில் அந்தக் குடியிருப்புகள் சமூக விரோதிகளின கூடாரமாக மாறியுள்ளது. சிலா் மதுக்கூடமாகவும் பயன்படுத்தி வருகிறாா்கள். அவா்கள் போதையில் பாட்டில்களை உடைத்து அறைக்குள் போடுவது, அறைக்குள் இருக்கும் மின்சாதன பொருள்களையும், கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும் சேதப்படுத்தி வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளை விரைந்து தோ்வு செய்து, பல கோடியில் கட்டப்பட்ட வீடுகளை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றாா் அவா்.