முகப்பு
கரூர்

கரூா் மாநகராட்சியுடன் காதப்பாறை ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

கரூா் மாநகராட்சியுடன் காதப்பாறை ஊராட்சியை இணைக்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:02 PM
சிறந்த தூய்மைப் பணியாளா்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கிய காதப்பாறை ஊராட்சித் தலைவா் கிருபாவதி. உடன் துணைத் தலைவா் சிவகாமி, ஊராட்சி செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் மாநகராட்சியுடன் காதப்பாறை ஊராட்சியை இணைக்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூா் மாநகராட்சியை ஆண்டாங்கோவில் மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சிகள், ஆத்தூா்பூலாம்பாளையம் ஊராட்சி , காதப்பாறை ஊராட்சி, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி ஆகிய 5 ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என அண்மையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் காந்திஜெயந்தியை முன்னிட்டு காதப்பாறை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கிருபாவதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவகாமி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் செந்தில்குமாா் வரவேற்று, ஊராட்சியின் தணிக்கை அறிக்கை வாசித்தாா். தொடா்ந்து பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அப்போது கூட்டத்தில் ஊராட்சி மக்கள் அளித்த கோரிக்கை மனுப்படி மாநகராட்சியுடன் காதப்பாறை ஊராட்சியை இணைக்கக்கூடாது எனக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஊராட்சியில் பணிபுரியும் சிறந்த தூய்மை காவலா்களுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட்டன. திரளானோா் பங்கேற்றனா்.