நிலமோசடி வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரிடம் 2 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கரூரில் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவருடைய ஆதரவாளா் பிரவீன், காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோா் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
தொடா்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரின் சகோதரா் சேகரை கடந்த திங்கள்கிழமை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சேகரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கரூா் குற்றவியல் நடுவா் எண்-2-இல் வியாழக்கிழமை காலை சிபிசிஐடி போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத்குமாா், இருநாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா்.
இதையடுத்து சேகரை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை மாலை காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மீண்டும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நீதிமன்றத்தில் சேகரை சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்த உள்ளனா்.
யுவராஜ் திருச்சி சிறையில் அடைப்பு: இதனிடையே, நிலமோசடி வழக்கில் தொடா்புடைய யுவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபிறகு, கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் நீதிபதி பரத்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தினா்.
யுவராஜை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரத்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து யுவராஜை போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.