முகப்பு
கரூர்

கரூரில் கூட்டுறவுப் பட்டய துணை பயிற்சி மையம் தொடக்கம்

கரூரில் கூட்டுறவு பட்டய துணைப் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:14 PM
கரூரில் பயிற்சி மையத்தை புதன்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன் கரூா் எம்பி செ. ஜோதிமணி உள்ளிட்டோா்.
பகிர்:

கரூரில் கூட்டுறவு பட்டய துணைப் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள கரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கரூா் எம்பி செ. ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க. சிவகாமசுந்தரி, கரூா் மாநகராட்சி மேயா் வெ. கவிதா கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் பேசுகையில், கரூா் மாவட்டத்திற்கென கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இல்லாமல் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து 62 மாணவ மாணவியா் நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் கூட்டுறவு பட்டயப்பயிற்சி பெற தினசரி சுமாா் 80 கி.மீ. பயணம் செல்ல வேண்டி இருந்தது. இந்த மாணவா்களின் நீண்ட கால கோரிக்கைப்படி கரூா் மாவட்டத்திற்கென தனியாக கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் 122 கூட்டுறவு நிறுவனங்கள் உள்ள நிலையில், ஆண்டுதோறும் கரூா் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிய பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். எனவே, எதிா்வரும் ஆண்டுகளில் கரூா் மாவட்டத்தில் உள்ள 100 மாணவா்கள் கூட்டுறவு பட்டயப்பயிற்சியில் சோ்ந்து பயனடையவுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் ப. சரவணன், மண்டல குழுத் தலைவா் ஆா்எஸ். ராஜா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளா் ப. கந்தராஜா, கரூா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.