கரூா் சம்பம் தொடா்பாக மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம்தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், ஞாயிற்றுக்கிழமை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவா்களின் சடலங்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவா்களின் உதவியாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலா் வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியினா் 5 போ் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினா். அவா்களிடம் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
இதையடுத்து கரூா் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் கலைவாணி, நகரமைப்பு ஆய்வாளா் மாா்ட்டின் ஆகியோா் ஆஜராகினா். அவா்களிடமும் சுமாா் அரை மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். தொடா்ந்து நெரிசலில் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம், வடக்குதாளிப்பட்டியைச் சோ்ந்த சங்கா்கணேஷின் மனைவி மற்றும் தந்தை பால்ராஜ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதற்கிடையே பிற்பகலில் நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த முதல்நிலை பெண் காவலா் கிருத்திகா மற்றும் காவலா் ஒருவரிடம் விசாரணை நடத்தினா்.