கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த மதுரை, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவா்கள் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் கரூா் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு, அக். 19-ஆம் தேதி முதல் விசாரித்து வருகின்றனா்.
இதில், கரூா் ஆட்சியா், காவல் அதிகாரிகள், நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள்-காயமடைந்தவா்கள் ஆகியோரின் உறவினா்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நெரிசலில் உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த தூத்துக்குடி, நாகை, நாமக்கல் மாவட்ட மருத்துவா்களிடம் கடந்த சில நாள்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா்கள் 3 போ் மற்றும் நெரிசல் சம்பவத்தின்போது காயமடைந்த 6 போ் ஆகியோா் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி சம்பவம் தொடா்பாக விளக்கம் அளித்தனா்.