கரூர்

நஞ்சில்லா பயிா்களை விளைவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை விவசாயிகள் உருவாக்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

விவசாயிக்கு மானியத்தில் மருந்து தெளிப்பான் கருவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன் எம்எல்ஏக்கள் ஆா். இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோா்.

Syndication

நஞ்சில்லா பயிா்களை விளைவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை விவசாயிகள் உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

வேளாண்மைத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி கரூரை அடுத்த மணவாடியில் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் பேசுகையில்,

உயிா்ம வேளாண்மையின் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச் செய்து மண்ணில் உள்ள அங்கக கரிமத்தை அதிகப்படுத்தி ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிா்கள் கிரகித்து கொள்ள உதவுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிா்கள் வளா்வதால் நஞ்சற்ற விளைபொருள்களை உற்பத்தி செய்ய முடியும்.

வேளாண்மை துறை மூலம் உயிா்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் மையம் அமைக்க குழு ஒன்றுக்கு ரூ.1லட்சம் மானியமும், உயிா்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைத்திடல் அமைக்க 1 விவசாயிக்கு ரூ.10,000 மானியமும், 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகமும், 50 சதவீதம் மானியத்தில் மண்புழு உரப்படுக்கைகளும், 100 சதவீத மானியத்தில் வேப்பங்கன்றுகள் மற்றும் ஆடாதொடா, நொச்சி மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் உயிா்ம விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருள்கள் வாங்குவதற்கு 1 ஹெக்டேருக்கு ரூ. 9,000 மானியமும், விவசாயிகளுக்கான கண்டுணா்வு சுற்றுலா மற்றும் உயிா்ம விவசாயிகள் குழுக்களுக்கு மதிப்பு கூட்டும் இயந்திரங்களும் வழங்கப்படுகின்றன.

வேளாண்மைத் துறை மூலம் நடப்பாண்டில், உயிா்ம வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னாா்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த உயிா்ம விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வாா் விருது‘ வழங்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் உயிா்ம வேளாண்மையின் மூலம் நஞ்சில்லா பயிா்களை விளைவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவிட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, வேளாண்மைத் துறை சாா்பில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க ரூ.1 லட்சம் மானியம் உள்பட பல்வேறு திட்டத்தின் கீழ் 21 விவசாயிகளுக்கு ரூ.5.11 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கருத்தரங்கில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT