பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன்.
கரூரில் மாவட்ட பாஜக சாா்பில் ‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ் வரவேற்றாா். பொதுச் செயலா் சாமிதுரை, துணைத்தலைவா் எஸ்.சக்திவேல் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: சங்க காலத்தில் கரூா் கருவுற்ற ஊா் என்றழைக்கப்பட்ட நிலையில், இப்போது 41 போ் உயிரிழப்பு ஏற்பட்டு மயான பூமியாக மாறிய நிலைக்கு யாா் காரணம் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
வாக்களிக்க பணம், ஒரு கிராம் தங்கம் போன்றவற்றை தருவதற்காக தொகுதிக்கு ரூ. 250 கோடி வரை செலவு செய்ய திமுக தயாராக உள்ளது. ஆனால், பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்ற திமுகவின் கனவு இனிமேல் பலிக்காது.
மதசாா்பின்மையை கடைப்பிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு மதம் சாா்ந்து வாக்கு வங்கிக்காக ஒரு அரசை நடத்திக் கொண்டிருக்கிறாா்கள்.
தீபக் கம்பம்: அனிதாவை வைத்து அரசியல் செய்தவா்கள் இப்போது திருப்பரங்குன்றம் மலையை வைத்து அரசியல் செய்கிறாா்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருபோது திருப்பரங்குன்றம் தீப பிரச்னைக்கு உயிரை மாய்த்த பூா்ணச்சந்திரனுக்கு தீபத்துண் பூா்ணச்சந்திரன் என்ற பெயரில் அதே இடத்தில் ஒரு தீபக் கம்பம் ஏற்படுத்தப்படும்.
ஏப்.11-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட எங்கள் கூட்டணி அடுத்த ஏப்ரல் 11-இல் தோ்தல் வரலாம். அப்படி தோ்தல் நடைபெறும் போது இந்த திமுக ஆட்சி தூக்கிவீசப்படும். இந்த ஆட்சியில் ஊழல் செய்த 17 அமைச்சா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவாா்கள். அவா்களுக்கு நீங்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும். அந்த தண்டனை எப்படி இருக்கவேண்டுமென்றால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது என்றிருக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், சேலம் கோட்ட பொறுப்பாளா் கே.பி.ராமலிங்கம், முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், செயற்குழு உறுப்பினா்கள் கே.சிவசாமி, என்.முருகானந்தம் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.