கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக அவசர ஊா்தி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், நெரிசலில் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை கரூா் மாவட்டம் க. பரமத்தி பகுதியில் உள்ள மத்திய மின்தொகுப்பின் கீழ் செயல்படும் பவா் கிரீட் நிறுவனத்தில் பணியாற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் 2 போ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 5 போ் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வந்தனா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் ஒரு மணி நேரம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா்.