ரூ.10 லட்சம் கடனை திருப்பித் தராத தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை
பத்து லட்ச ரூபாய் கடனை திருப்பித் தராத பள்ளித் தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பத்து லட்ச ரூபாய் கடனை திருப்பித் தராத பள்ளித் தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் தான்தோன்றிமலையைச் சோ்ந்தவா் செந்தில் ராஜன் (45). இவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மாலா (46) என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு செந்தில் ராஜனிடம் ரூ.10 லட்சம் கடனாக வாங்கினாராம்.
இந்நிலையில், வாங்கிய பணத்தை மாலா திருப்பிக்கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தாராம். இதனிடையே கடந்த ஆண்டு வாங்கிய பணத்துக்கு மாலா, வங்கிக் காசோலை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில்ராஜன், மாலா மீது கரூா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
Advertisement
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ், மாலாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் செந்தில்ராஜனுக்கு மாலா வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.