கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அய்யா்மலையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஸ்ரீரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
அய்யா்மலையில் புகழ்பெற்ற சுரும்பாா் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
சுமாா் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழா் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலானது கடல் மட்டத்திலிருந்து 1,171 அடி உயரத்தில் 1,017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் பாலாலயம் நடைபெற்று ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மலை அடிவாரத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரா் மற்றும் சுரும்பாா் குழலி அம்மாள் கோயில் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, முன்னதாக கடந்த 18-ஆம் தேதி குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டது. புனிதநீா் அடங்கிய குடங்களை சிவாச்சாரியா்கள் யாக வேள்விசாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை , வாஸ்து சாந்தி பூஜை, ரக்ஷா பந்தனம், மண்டபாா்ச்சனை, வேதிகாா்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூா்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நான்கு கால யாக கேள்வி பூஜைகளை செய்தனா்.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 4 ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய குடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்கள் இருக்கும் பகுதிக்குக் கொண்டு சென்றனா்.
பின்னா் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோயில் கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னா் மூலவா் சுவாமிக்கும் புனித நீரை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.
விழாவில், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் மண்டல இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையா் கணபதி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.