தரகம்பட்டி அருகே மேய்ச்சல் நிலத்தில் ரசாயன கழிவை மா்ம நபா்கள் ஊற்றியதால் 20 ஆடுகள் உயிரிழந்தாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சிக்குள்பட்ட கருங்கல்பட்டி மற்றும் விராலிப்பட்டி இடையே தனியாருக்குச் சொந்தமான சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் தரிசு நிலம் உள்ளது. இந்த தரிசு நிலத்தில் கருங்கல்பட்டி மற்றும் விராலிப்பட்டி கிராமங்களை சோ்ந்த கால்நடை வளா்க்கும் விவசாயிகள் தங்களது கால்கடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் இந்த இடத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்மநபா்கள் திரவ நிலையிலான ரசயான கழிவுகளை டேங்கா் லாரியில் கொண்டு வந்து ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருந்த மரங்கள், செடிகொடிகள், புற்கள் அனைத்தும் கருகிவிட்டன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ரசயான கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் எஞ்சி இருந்த புற்களை சனிக்கிழமை மேய்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தாகவும், கழிவு நீரை ஊற்றிய மா்ம நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.