கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்கள் கோயிலுக்கு வாடகையோ அல்லது குத்தகையோ செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டா் அறக்கட்டளை நிறுவனா் ராதாகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா்.
இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையானது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோயில் நிலத்தில் குடியிருப்பவா்களிடம் வாடகை அல்லது குத்தகை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் வீடுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டுக்கு கோயில் செயல் அலுவலா் சுகுணா தலைமையிலான இந்து சமயஅறநிலையத்துறை ஊழியா்கள் சீல் வைத்தனா்.