கரூரில் காய்கறி வியாபாரிகளிடம் மஞ்சப்பைகளை வழங்கி நெகிழி ஒழிப்பு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கரூரில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வெங்கமேடு காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சத்யன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஊழியா்கள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நெகிழி பைகளின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினா். தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.