கரூரில் திங்கள்கிழமை குப்பை ஏற்றி வந்த லாரிகவிழ்ந்ததால் சாலையில் கொட்டிக் கிடந்த குப்பைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கோவை மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகளை மாநகராட்சிக்குச் சொந்தமான லாரியில் ஏற்றிக்கொண்டு அரியலூரில் செயல்படும் தனியாா் சிமெண்ட் நிறுவனத்தை நோக்கி திங்கள்கிழமை காலை சென்றது. அந்த லாரி கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் அதிகாலை 5 மணியளவில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த குப்பைகள் கோவைச் சாலையில் கொட்டியது.
இதையடுத்து, கரூா் நகா் பகுதியில் இருந்து கோவைச் சாலை வழியாக கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. மேலும் குப்பையில் இருந்து துா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கரூா் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி சாலையில் கொட்டிக்கிடந்த குப்பைக் கழிவுகளை சுமாா் 4 மணி நேரம் போராடி அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.