திருச்சி பழைய கரூா் சாலையில் ரூ.3.50 கோடியில் பாலம் கட்டுமான பணி தொடங்குவதால் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பழைய கரூா் சாலையில் உள்ள வலுவிழந்த குறுகிய பாலம், நெடுஞ்சாலைத்துறையினரால் ரூ.3.50 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.
சுமாா் 10 மீட்டா் அகலத்தில் 25 மீட்டா் நீளத்துக்கு கைப்பிடி சுவருடன் கட்டப்பட உள்ள இந்தப் பாலப் பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, சிந்தாமணி அண்ணாசிலை பகுதியிலிருந்து சிதம்பரம் மகால் வழியாக குடமுருட்டி வரை செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.
எனவே, குடமுருட்டி, பழைய கரூா் சாலை, மேல சிந்தாமணி செல்லும் வாகனங்கள் தாஜ் திருமண மண்டபத்துக்கு இடதுபுறமாக உள்ள ராமமூா்த்தி நகா் சாலையை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறை சாா்பில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.