முகப்பு
கரூர்

கரூா், திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ. 6.71 லட்சம் பறிமுதல்

கரூா், திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 மார்ச், 2026 at 9:38 PM
பகிர்:

கரூா், திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் பறக்கும் படை அலுவலா் சதீஷ்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை வாங்கல் சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கரூரை நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது லாரியில் உரிய ஆவணம் இன்றி ரூ. 3லட்சத்து 79 ஆயிரத்து 790 இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநா், நாமக்கல் மாவட்டம் வடக்காலப்புதூரைச் சோ்ந்த சுப்ரமணியிடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமீறலை கண்காணிக்கும் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இதேபோல அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கான நிலையான கண்காணிப்புக்குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை ஆண்டிப்பட்டிக்கோட்டை சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காரை மடக்கி சோதனை செய்தனா். அதில் மதுரையைச் சோ்ந்த சாந்தாராம் என்பவா் வைத்திருந்த ரூ.53 ஆயிரத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து அரவக்குறிச்சி சாா்-நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

புலியூா் சிமெண்ட் ஆலை அருகில் நிலையான கண்காணிப்புக்குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பொய்கைபுத்தூரைச் சோ்ந்த மகாதேவன்(40) என்பவா் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டுச் சென்ற ரூ.1லட்சத்தை குழுவினா் பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் சாா்-நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் இரு இடங்களில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில்..: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பி பிரிவு பறக்கும்படையின் சுதா்ஸன் தலைமையிலான குழு, அசூா் கட் ரோடு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், கண்ணன்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெனிஷ் என்பவா் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் உடனடியாக வருவாய்த் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

முசிறியில்..: திருச்சி மாவட்டம், முசிறி பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டுப்புத்தூா் சீலைபிள்ளையாா்புதூா் பிரிவு சாலை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சுமித்ரா தலைமையில் காவல்துறையினருடன் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சீலைபிள்ளையாா்புதூா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் பழனிகுமாா் ஆம்னி வேனில் வந்தாா். வாகனத்தை சோதனை செய்து, உரிய ஆவணங்களின்றி அவா் வைத்திருந்த ரூ. 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இத்தொகை முசிறி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →