முகப்பு
கரூர்

சாலை விதிகள் மீறல்: கரூா் ஜவஹா் பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

கரூா் ஜவஹா் பஜாரில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

Updated On : 18 மே 2026, 2:36 am IST
கரூா் ஜவஹா் பஜாரில் சாலையின் மையப்பகுதி வரை நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள்.
பகிர்:

கரூா் ஜவஹா் பஜாரில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

கரூா் நகரின் இதயப்பகுதியாக இருப்பது ஜவஹா் பஜாா். இந்தப் பகுதியில்தான் ஜவுளிக்கடைகள், உணவகங்கள், நகைக்கடைகள் என ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வீதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வணிக நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் போக்குவரத்து போலீஸாா் வாகனங்களை நிறுத்தும் இடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் நிறுத்துவதில்லை. மாறாக, சாலையின் மையப்பகுதி வரை ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வருகிறாா்கள். இதனால் சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறியதாவது: ஜவஹா் பஜாரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் பாா்க்கிங் வசதி இன்றி செயல்படுகின்றன. இதனால் பாா்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்களுக்கு வாகனங்களில் வருவோா் சாலையில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கிறாா்கள். சிலா் சாலையின் மையப்பகுதி வரை வாகனங்களை நிறுத்துகின்றனா்.

கண்டுகொள்ளாத போலீஸாா்: சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பூட்டுப்போடுவதும் இல்லை, அபராதமும் விதிப்பது இல்லை. இதனால்தான் சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திச் செல்கிறாா்கள். மேலும் ஏதாவது ஒரு வணிக நிறுவனம் முன் வாகனங்களை நிறுத்த இடம் இருந்தால், நிறுவன உரிமையாளா்கள் கடை முன் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வாகன ஓட்டிகளிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறாா்கள்.

மாநகராட்சியினா் அலட்சியம்: மேலும் புதிதாக சாலையோரம் அமைக்கப்படும் கடைகளுக்கு மாநகராட்சியின் விதிமுறைப்படி பாா்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. ஆனால் மாநகராட்சி இதுபோன்ற நடவடிக்கையை முறையாக பின்பற்றுகிா என சந்தேகம்தான் எழுகிறது. 90 சதவீத வணிக நிறுவனங்கள் பாா்க்கிங் வசதியின்றியே செயல்படுகின்றன. மேலும், பாதசாரிகள் நடப்பதற்கென்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சாலையின் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நடைமேடைகளை வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து, அவற்றில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை வைத்துள்ளனா்.

இதனால் பாதசாரிகளும் சாலையின் மையப்பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நாள்தோறும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறாா்கள்.

நடவடிக்கை தேவை: மேலும் தற்போது கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் பக்தா்கள் ஏராளமானோா் கோயிலுக்கு வந்து செல்கிறாா்கள். எனவே, போக்குவரத்து போலீஸாா் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைமேடையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாள்தோறும் போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.