ஆசாத் கல்வி அறக்கட்டளை உதவித்தொகைக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும்
ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்து கல்வியில் சிறந்து விளங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து கல்வி பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை என்னும் திட்டம் 9 முதல் பிளஸ் 2 வரை பயில்வோருக்கு வழங்கப்படுகிறது.
2018-19ஆம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் செப்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்களின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால் உதவித்தொகை பெற இயலாது. இத்திட்டத்தின் கீழ் 9, பத்தாம் வகுப்பு வரை ரூ.10 ஆயிரமும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.12 ஆயிரம் மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த கல்வி உதவித் தொகையில் சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் உண்டு உறைவிடம் ஆகிய செலவினங்களும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தர மதிப்பெண்கள் முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களுடன் பள்ளித் தலைமை ஆசிரியர், முதல்வர் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் செப்.30ஆம் தேதிக்குள் The Secretary & CEO, Maulana Azad Educational Foundation, Maulana Azad Campus, Chelmsford Road, Opposite New Delhi Railway Station (Paharganj side), New Delhi-110 055 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.