பெரம்பலூர்

"பயிர்க்கடனை உயர்த்தி வழங்க அனுமதி தேவை'

DIN

விவசாயிகளுக்கான குறுகியகால பயிர்க்கடனை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதிக்க வேண்டுமென, தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.   
தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின், பெரம்பலூர் மாவட்டக்கிளை பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்டத் தலைவரும், மண்டல இணைச் செயலருமான கணேசன் தலைமை வகித்தார். டெல்டா மண்டல செயலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். 
மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் உறுதிமொழியும், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி நிதிநிலை குறித்தும் இணைச் செயலர் திருமுருகன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை வாசித்தனர். 
மாநில கெளரவ பொதுச்செயலர் குப்புசாமி, பொதுச்செயலர் முத்துப்பாண்டியன், மாநில பொருளாளர் சேகர், துணைத் தலைவர்கள் சங்கரன், துரைக்கண்ணு ஆகியோர் பேசினர்.  
கூட்டத்தில், விவசாயக் கடன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும், எவ்வித ஆவணமும் கேட்காமல் ரூ. 2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். விவசாயக் கடன்களுக்கு உரம் வழங்கிட மத்திய கூட்டுறவு வங்கிகளால் கட்டாயப்படுத்துவதை கைவிடவேண்டும். சங்க உறுப்பினர்களுக்கு குறுகிய கால பயிர்க்கடன் அடமானம் பெறாமல் தனிநபர் ஜாமீன்பேரில் ரூ. 1 லட்சம் வரை அனுமதிக்கப்படுவதை ரூ. 2 லட்சமாகவும், தொடர் அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடன்தொகையை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாகவும் உயர்த்தி வழங்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.
உர விற்பனையை ஆரம்ப கால நடைமுறைப்படி விநியோகம் செய்ய அனுமதிக் கவேண்டும். அல்லது, உர விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட சங்க தலைவருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். நகைக்காசுக் கடனுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வட்டி வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
இந்த கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலனைக்கு ஏற்று, உரிய நடவடிக்கை மேற்கொண்டு கூட்டுறவுக் கடன் சங்கங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (செப். 17) கடன் வழங்கும் பணியை முற்றிலும் புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாவட்ட செயலர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT