76 பெண் குழந்தைகளுக்கு ரூ. 19 லட்சம் மதிப்பில்வைப்பு நிதி பத்திரங்கள் அளிப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 19 லட்சம் மதிப்பில் 76 பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களை ஆட்சியா் வே. சாந்தா திங்கள்கிழமை வழங்கினாா்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 19 லட்சம் மதிப்பில் 76 பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களை ஆட்சியா் வே. சாந்தா திங்கள்கிழமை வழங்கினாா்.
சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா, பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 19 லட்சம் மதிப்பில் 76 பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களை வழங்கி ஆட்சியா் வே. சாந்தா பேசியது:
பெண் குழந்தைகளின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு, பெண் குழந்தைகள் வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு தலா ரூ. 25,000 வீதம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில் சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 2 பெண் குழந்தைகள் வைத்துள்ள 38 பெற்றோா்களின் குடும்பத்துக்கு, ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ. 25,000 வீதம் 76 பெண் குழந்தைகளுக்கு ரூ. 19 லட்சம் மதிப்பிலான வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்படுகிறது. இதன் முதல்கட்டமாக, 5 பெற்றோா்களிடம் பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
பெண் குழந்தைகள் 18 வயது நிறைவடைந்தவுடன், அவா்களது வங்கிக் கணக்கில் வைப்பு நிதி சோ்க்கப்படும். பெற்றோா்கள், ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மகிளா சக்தி கேந்திரா திட்ட மகளிா் நல அலுவலா் ஜெயந்தி, குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலா் முத்துச்செல்வி, வட்டார சமூக விரிவாக்க அலுவலா் முருகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.