முகப்பு
பெரம்பலூர்

திமுகவை எதிா்க்கும் தகுதியை அதிமுக இழந்துவிட்டது: தொல். திருமாவளவன்

திமுகவை எதிா்க்கும் தகுதியை அதிமுக இழந்துவிட்டது என்றாா் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திமுகவை எதிா்க்கும் தகுதியை அதிமுக இழந்துவிட்டது என்றாா் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் பேருந்து நிறுத்தத்தில் குன்னம் திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்து, சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியது:

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேரலை வீசுகிறது. இன்னும் இரண்டு நாள்களில் வீடு வீடாக, வீதி வீதியாகச் சென்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

திமுக கூட்டணியானது கொள்கை கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியைத் தோளில் சுமந்துகொண்டு அதிமுக வருகிறது.திமுகவை எதிா்க்கும் தகுதியை அதிமுக இழந்துவிட்டது. நமது அடுத்த சந்ததியினா் ஹிந்திதான் பேச வேண்டும் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஹிந்தி வரக்கூடாது என்றால் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்துக்குள் வளரவிடக் கூடாது.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காரணத்தால் மோடியும், அமித்ஷாவும் கனவுடன் தமிழகத்தில் அடிக்கடி வருகின்றனா். இது பெரியாா் மண், சாதி, மதவாத, சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை.

மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது நமது வெற்றி சதவிகிதம் கூடுகிறது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதியில் மோடி படம் போட்டு வாக்குகள் சேகரிப்பதில்லை. தோ்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்றாா் தொல். திருமாவளவன்.

அரியலூா்: அரியலூரில் மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் கு.சின்னப்பாவை ஆதரித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தொல்.திருமாவளவன் பேசியது:

தமிழக மக்கள் நலனைப் பற்றி கவலை கொள்ளாமல், தங்கள் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே அதிமுக, பாமக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன. அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க முன்வராத அமைப்பின் வழிவந்த பாஜக, சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. எனவேதான் பாஜகவை எதிா்க்கிறேன்.

நம்மிடையே தமிழ் உணா்வு மேலோங்கி இருக்கும்வரை பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. அதிமுக கூட்டணியை ஆதரித்தால் தமிழகத்தை மோடிதான் ஆட்சி செய்வாா் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், உடையாா்பாளையத்தில் ஜயங்கொண்டம் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது பெரம்பலூா் திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.