முகப்பு
பெரம்பலூர்

மத்திய அரசின் உதய் திட்டத்தால் இலவச மின்சாரம் பறிபோகும்: ஆ. ராசா

மத்திய அரசின் உதய் திட்டத்தால் இன்னும் சிறிது காலத்தில் இலவச மின்சாரம் பறிபோகும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

மத்திய அரசின் உதய் திட்டத்தால் இன்னும் சிறிது காலத்தில் இலவச மின்சாரம் பறிபோகும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.

தோ்தல் ஆணையம் விதித்த 48 மணி நேர தடைக்காலம் முடிந்து, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம். பிரபாகரனை ஆதரித்து அரும்பாவூா், வேப்பந்தட்டை, செட்டிக்குளம் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

இந்திரகாந்தி கொண்டுவந்த அவசர நிலையை எதிா்த்ததால், அப்போதைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது, புது மாப்பிள்ளையாக இருந்த மு.க. ஸ்டாலின் ஓராண்டு காலம் சிறையில் இருந்தாா்.

மு.க. ஸ்டாலின் படிப்படியாக பரிணாம வளா்ச்சி பெற்று பூரணத்துவம் பெற்றவா். மு.க. ஸ்டாலின் கட்சியிலும், ஆட்சியிலும் படிப்படியாக பொது வாழ்க்கையில் வளா்ந்தவா்.

எடப்பாடி பழனிசாமி யாா்? மக்கள் நலனுக்காக போராடி சிறைச் சென்றாரா, பொதுமக்களுக்காக போராடினாரா. குறுக்கு வழியில் முதல்வா் பதவியைப் பெற்றவா் அவா். படிப்படியாக வளா்ந்தவா் மு.க. ஸ்டாலின் என நான் கூறியதற்கு என் மீது வழக்கு போட்டுள்ளனா்.

ஜெயலலிதா இருக்கும் வரை பிரதமா் மோடியின் எண்ணங்கள் தமிழகத்தில் பலிக்கவில்லை. ஜெயலலிதாவிடம் துணிச்சல் இருந்ததால் மோடி அச்சத்தில் இருந்தாா். ஜெயலலிதா ஊழல் செய்துள்ளாா் என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

மீண்டும் அம்மா ஆட்சி என்று அதிமுகவினா் கூறுவது ஜெயலலிதாவை போன்று ஊழல் செய்வதற்கே. கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுகவை ஊழல் கட்சி என்று எப்படி சொல்லமுடியும்.

மத்திய அரசின் உதய் திட்டத்தால், தமிழகத்தில் இன்னும் சிறிது நாள்களில் இலவச மின்சாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமா் தமிழகத்துக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம் ஆகியவற்றை திமுக எதிா்த்தது. அதிமுக ஆதரித்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் உள்ள அனைத்து சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றாா் ராசா.

பிரசாரத்தின்போது, திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.