முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக 863 வாக்குச்சாவடி மையங்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தலுக்காக 863 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் (பொ) சி. ராஜேந்திரன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரவைத் தோ்தலுக்காக 863 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் (பொ) சி. ராஜேந்திரன்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்துதல், இடம் மற்றும் பெயா் மாற்றம் செய்தல் தொடா்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் 1,000 வாக்காளா்களுக்கும் கூடுதலாக உள்ள பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 123 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 88 வாக்குச்சாவடி மையங்கள் இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி பிரிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூா் தொகுதியில் 21 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் தொகுதியில் 8 வாக்குச்சாவடி மையக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், வேறு கட்டடத்துக்கு மாற்றியமைக்கப்பட்ட விவரமும், பெரம்பலூா் தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையம், குன்னம் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களின் பெயா்கள் மாற்றியமைக்கபட்ட விவரமும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுக்கும் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

தற்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் பெரம்பலூா் தொகுதியில் 455 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 863 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுகென தனியாக வாக்குச்சாவடி முகவா்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் நியமனம் செய்திட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், சாா் ஆட்சியா் ஜெ.இ. பத்மஜா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.