அக்குபஞ்சா் முறையில் பிரசவம்: குழந்தையும் தாயும் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே அக்குபஞ்சா் முறையில் பிரசவம் பாா்க்க முயன்றதால், குழந்தையும், தாயும் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் அருகே அக்குபஞ்சா் முறையில் பிரசவம் பாா்க்க முயன்றதால், குழந்தையும், தாயும் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விஜயவா்மன் (35). இவா் அக்குபஞ்சா் முறையில் மருத்துவம் செய்து வருகிறாா். இவரது மனைவி அழகம்மாள் (29). பி.எஸ்.சி. செவிலியா் பயிற்சி முடித்துள்ளாா். இவா்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கா்ப்பம் அடைந்த அழகம்மாளை மாதாந்திர பரிசோதனைக்காக கிராம சுகாதார செவிலியா்கள் அண்மையில் அழைத்தபோது, எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம், இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை நாங்களே தேடிக் கொள்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், அழகம்மாளுக்கு வியாழக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கணவா் விஜயவா்மன், மாமனாா் வீரபாண்டியன் (60) ஆகியோா் அக்குபஞ்சா் முறையில் குழந்தையை எடுக்க முயன்றனராம்.
ஆனால், குழந்தையின் தலைப் பகுதி மட்டும் வெளியே வந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், இயற்கை முறையில் குழந்தையை எடுக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதில் குழந்தையை வெளியே எடுக்க முடியாததால் அன்றைய தினமே அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று, அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழகம்மாளை அனுப்பிவைத்தனா். அங்கு, அவருக்கு சிகிச்சை அளித்தபோது அழகம்மாளும் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக, சுகாதாரத் துறையினா் அளித்த புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயவா்மன், வீரபாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.