முகப்பு
பெரம்பலூர்

ஒருதலைக்காதல் பிரச்னை: இளம்பெண்ணை கொலை செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை குத்திக் கொன்ற இளைஞா், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை குத்திக் கொன்ற இளைஞா், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் தனலட்சுமி (22). இவா், கொளப்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடிச் சென்று தங்கி வருவது வழக்கமாம். இந்நிலையில், பாட்டி வீட்டுக்கு அருகே வசிக்கும் அண்ணாதுரை மகன் அருண்பாண்டியன் (30) என்பவா் தனலட்சுமியை காதலித்ததாகத் தெரிகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன் அருண்பாண்டியன், தனலட்சுமியை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறி, அவரது வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளாா். அருண்பாண்டியனுக்கு பெற்றோா் இல்லாததை காரணமாகக் கூறி, தனலட்சுமியின் பெற்றோா் பெண் தர மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் தனலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தாராம்.

இந்நிலையில், கொளப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சிக்காக, தனது உறவினா் ஆகாஷ் (22) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கொளப்பாடி கிராமம் நோக்கி தனலட்சுமி சென்றுக்கொண்டிருந்தாா். சின்ன வெண்மணி கிராமம் அருகே சென்றபோது வழிமறித்த அருண்பாண்டியன், தனலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி அரியலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதனிடையே, சின்ன வெண்மணி கிராமத்திலுள்ள தனது தோட்டத்தில் அருண்பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அருண்பாண்டியன் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.